Menu Left Menu Right
சற்று மு‌‌ந்‌‌தைய செய்தி
முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை
Defaultவிலைவாசி உயர்வு, ரயில் கட்டணம் உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவை அலுவல், பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரையும் அதைத் தொடர்ந்து நாள் முழுவதுமாகவும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் எதிர்கொள்ளும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். இந்தக் கூட்டத்தொடரில் நடப்பு ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் செவ்வாய்க்கிழமையும், பொது பட்ஜெட் 10-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படவுள்ளன. இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய மக்களவை அலுவல், முதல் நாளிலேயே காங்கிரஸ் உறுப்பினர்களால் முடக்கப்பட்டது.

மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) உறுப்பினர் கவிதா கல்வகுண்ட்லா, சமாஜவாதி கட்சி உறுப்பினர் தர்மேந்திர யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர் ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து, "விலைவாசி உயர்வைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. பயணிகள் ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்' என்று கோஷமிட்டனர்.

அப்போது, மகராஷ்டிரத்தைச் சேர்ந்த பாராமதி தொகுதி உறுப்பினர் சுப்ரியா சுலே, வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கான காரணங்கள் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால், அவர் எழுப்பிய கேள்வி அவையில் சரியாக கேட்கவில்லை. இதையடுத்து, அவை அலுவலை நண்பகல் 12 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

பின்னர் அவை கூடியபோது, அண்மையில் ஐந்து செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள், விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த சாய்னா நெவால், பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, "பூஜ்ய நேர அலுவல்' (முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரம்) தொடங்கியபோது மீண்டும் விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு ஆகியவற்றுடன் பெட்ரோல், டீசல் விலையேற்ற விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் "ஷேம், ஷேம்' (அவமானம், அவமானம்) என்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர். தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், தனது தாயாருமான சோனியாவின் இருக்கை அருகே நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து, பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை, பின்னரும் தொடர்ந்த அதே நிலையால் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

"மௌனம் கலைத்த ராகுல்': இதற்கிடையே, மக்களவையில் ராகுல் காந்தி குரல் எழுப்பிய தற்கு பாஜக ஆச்சரியம் தெரிவித்தது. இது குறித்து அக்கட்சி எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், "முந்தைய காலங்களில் பொதுமக்களின் பிரச்னைகள் அவையில் எழுப்பப்பட்டபோது பேசவே தயக்கப்பட்ட ராகுல் காந்தி, முதல் முறையாக அவையில் கோஷமிட்டது வியப்பை அளிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பேசாத ராகுல் இப்போதாவது மௌனம் கலைத்தாரே என்பதற்காக அவரைப் பாராட்டுகிறேன்' என்றார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!